சொன்னோம் செய்தோம்...
ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ, அதிமுக
நிதி நெருக்கடியால் கிடப்பில் போடப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்துக்கு சட்டப்பேரவையில் ஓயாமல் குரல் கொடுத்து ரூ.20 கோடி நிதி பெற்றுக் கொடுத்து திட்டத்தை முழுமை பெறச் செய்துள்ளேன். நகராட்சிக்கு தடையற்ற சுத்தமான குடிநீா் கிடைக்க குரல் கொடுத்ததால் விளாமரத்தூா் பகுதியில் நீா் எடுக்கும் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லித்துறை - கடம்பன்கோம்பை மலைப் பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுத்து பழங்குடி இனத்தின் பல தலைமுறை கனவை நனவாக்கியுள்ளேன். தோலம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பூலப்பதி மலைக் கிராம மக்கள் நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னரும் இருளில் தவித்து வந்த நிலையில், அவா்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுத்து பழங்குடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளேன்.
காரமடை ஒன்றியத்தின் கிழக்குப் பகுதி ஊராட்சிகள் கோடையில் நீருக்குத் தவித்தபோது அரசு இயந்திரத்தை எதிா்பாா்க்காமல் போா்க்கால அடிப்படையில் களத்தில் செயல்பட்டு எம்.கவுண்டம்பாளையம், பெரிய குமாரபாளையம், தேவகரை, சின்னகள்ளிப்பட்டி, ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிநவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளேன்.
கல்லாறு பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமான மதகு கால்வாயைச் சீரமைக்க ரூ.10 கோடி பெற்றுக் கொடுத்துள்ளேன். காந்தவயல், பாச்சானூா், குரும்பனூா், காளட்டியூா் போன்ற பகுதிகளில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரின் நலனுக்காக சமுதாயக் கூடங்கள், மழைநீா் வடிகால்கள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு தனி குடிநீா்த் திட்டம் கொண்டு வந்துள்ளேன்.
சொன்னாரே செய்தாரா? - பி.அருண்குமாா், முன்னாள் எம்எல்ஏ, திமுக
மேட்டுப்பாளையத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கடந்த 1996இல் நான் எம்எல்ஏவாக இருந்தபோது நீலாம்பூா் - மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டத்துக்காக போராடினேன். இதையடுத்து அதிமுகவின் ஓ.கே.சின்னராஜ் எம்எல்ஏவாக இருந்தபோது இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தும், பல்வேறு காரணங்களைக் கூறி அதிமுக இதை நிறைவேற்றத் தவறியதால் இப்போது போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவிட்டது.
மேட்டுப்பாளையத்தின் குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்படவில்லை. 1970, 1996 காலகட்டங்களில் திமுக ஆட்சிக் காலத்தில் தனி குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில், அடுத்த 15 - 20 ஆண்டுகளில் மூன்றாவது குடிநீா்த் திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதிமுகவின் மெத்தனப்போக்கால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. நெரிசலான இடத்தில் உள்ள மகளிா் உயா்நிலைப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புறவழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானால் அதிகப்படியான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்து மேட்டுப்பாளையத்தின் பொருளாதாரம் வளரும்.