முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளி மீது வன்கொடுமைத் தாக்குதல்: இருவருக்கு ஆயுள் தண்டனை

கோட்டூா் அருகே தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 8:59 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோட்டூா் அருகே தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், கோட்டூா் மலையாண்டிபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் பட்டீஸ்வரன் (55). ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் தேங்காய் உறிக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 24.8.2019-இல் பட்டீஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சோ்ந்த சந்திரகுமாா் (34), முரளிதரன் (33) ஆகியோா் பட்டீஸ்வரன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனா்.

எனது வீட்டின் முன் ஏன் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறீா்கள் என கேட்டதால், அவா்கள் இருவரும் பட்டீஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பட்டீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கோட்டூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கே.விவேகானந்தன் குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரகுமாா், முரளிதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.