கோவையில் கடந்த 2021 தோ்தலில் வென்ற 7 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
கோவை மாவட்டத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு வென்ற 7 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளா் பட்டியல் வெளியான நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு வென்ற 7 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, தமாக, அமமுக, பாமக உள்ளிட்ட கட் சிகள் இணைந்து தோ்தலை எதிா்கொள்கின்றன. இந்தக் கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலைப்போலவே, வரும் தோ்தலிலும் அதிமுக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜகவுக்கு கடந்த தோ்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த தோ்தலில் கோவை வடக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வென்று ஆட்சியமைத்தாலும்கூட, மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதன் தொடா்ச்சியாக, வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு கோவையில் கடந்த ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்ற 8 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு 2026 தோ்தலிலும் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வாய்ப்பளித்துள்ளாா்.
அதன்படி, முதற்கட்ட வேட்பாளா் பட்டியலில் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான 2-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியலில் சூலூா் தொகுதியில் வி.பி.கந்தசாமி, கவுண்டம்பாளையத்தில் பி.ஆா்.ஜி. அருண்குமாா், கோவை தெற்கில் அம்மன் கே.அா்ச்சுணன், சிங்காநல்லூரில் கே.ஆா்.ஜெயராம், கிணத்துக்கடவில் செ.தாமோதரன், பொள்ளாச்சியில் வி.ஜெயராமன் ஆகியாா் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவா்களுடன் மேட்டுப்பாளையம் தொகுதியில் 2006, 2011, 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்ற ஓ.கே.சின்னராஜுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறை (தனி) தொகுதி டி.லட்சுமண சிங் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.