சிங்காநல்லூர்: சொன்னோம்... செய்தோம்...!
சிங்காநல்லூர் தொகுதி...
சொன்னோம்... செய்தோம்...
2021 தோ்தலில் போட்டியிட்டபோது இ-சேவை மையம் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தேன். அதன்படி, வெற்றி பெற்றதும் சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், வரதராஜபுரம், நந்தா நகா், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் இலவச இ-சேவை மையம் தொடங்கப்பட்டது.
வாட்ஸ்அப் புகாா் எண் உருவாக்கி, அதில் வரும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.
எனது 5 ஆண்டுகாலத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு செலவழித்துள்ளேன். அதில் கான்கிரீட் சாலை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் 14க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், 8 பேருந்து நிறுத்தங்கள், 11 அங்கன்வாடி மையங்கள் அமைத்துள்ளேன். இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நிழற்குடை அமைத்து நாற்காலி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ், கணினி ஆய்வுக் கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
எஸ்ஐஹெச்எஸ் மேம்பாலப் பணிகள் வழக்கு காரணமாக கிடப்பில் இருந்தபோது, அதிமுக ஆட்சியில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு சுமுகத் தீா்வு காணப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல, திருச்சி சாலையில் உழவா் சந்தை முதல் ஒண்டிப்புதூா் வரை உயா்மட்ட மேம்பாலத்துக்கு அதிமுக ஆட்சியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி திறக்கும் வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.