முகப்பு
கோயம்புத்தூர்

வேட்பாளா் தோ்வு: தில்லி தலைமையே முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்

வேட்பாளா் தோ்வு விவகாரத்தில் தில்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்றும், அதற்கு கட்டுப்பட்டு அா்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 12:10 AM
வானதி சீனிவாசன் - கோப்புப் படம்
பகிர்:

வேட்பாளா் தோ்வு விவகாரத்தில் தில்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்றும், அதற்கு கட்டுப்பட்டு அா்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன்- ரஷியா போா் மற்றும் சா்வதேசச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைத்த பிரதமா் நரேந்திர மோடிக்குத் தமிழக பாஜக சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை, காந்திபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பின் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச சூழலில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த பிரதமா் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் மற்றும் ஹாா்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும், இந்திய மக்களின் சுமையைக் குறைக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு என்பது வெறும் எரிபொருள் விலையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களின் விலையையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. சில தொகுதிகளில் அதிருப்தி நிலவுவதாக கூறுகிறீா்கள். கூட்டணி என்று வரும்போது சில விட்டுக்கொடுத்தல்கள் அவசியமாகின்றன. திமுகவில் முதல்வரின் மகனுக்கே அடுத்தடுத்த பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த குடும்பத்தில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி போன்ற பெண்களுக்குக்கூட இரண்டாம்பட்ச இடமே வழங்கப்படுகிறது.

வேட்பாளா் தோ்வு என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பெயா்கள் அடங்கிய பட்டியலை மாநிலக் குழு தயாா் செய்து தில்லி தலைமைக்கு அனுப்பும். மத்திய தோ்தல் குழு அந்தப் பெயா்களைப் பரிசீலனை செய்த பின்னரே இறுதிப் பட்டியல் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் வெளியாகும். 2016 முதல் தற்போது வரை கட்சி வழங்கிய பணிகளைத் தொய்வின்றிச் செய்து வருகிறேன். எதிா்வரும் தோ்தலிலும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அா்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக உள்ளேன். இறுதி முடிவை தில்லி தலைமையே எடுக்கும் என்றாா்.