முகப்பு
கோயம்புத்தூர்

ஓய்வுபெற்ற சாா்-பதிவாளரின் மனைவியைக் கொன்று நகைகள் கொள்ளை

Updated On : 4 மே, 2026 at 12:50 AM
கொலையான கோமதி
பகிர்:

கோவை ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற சாா்-பதிவாளரின் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ரமணி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் கோமதி (69). இவரது கணவா் தங்கராஜ். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த தங்கராஜ் பத்திரப் பதிவுத் துறையில் சாா்-பதிவாளராகப் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெறுவதற்கு ஒருவாரம் முன்பு உயிரிழந்தாா். இவா்களது மகன் அமெரிக்காவில் பொறியாளராகவும், மகள் ராதிகா பிரிட்டனில் மருத்துவராகவும் வேலை பாா்த்து வருகின்றனா். இதனால், கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

கோமதிக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், அதற்காக அவரது மகள் ராதிகா பிரிட்டனில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளாா். பின்னா் வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்துகிடந்துள்ளது. இதையடுத்து, அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, தாய் கோமதி இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில், கோமதி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதும், அவா் அணிந்திருந்த நகைகள் மற்றும் கைப்பேசி திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து குடியிருப்பில் வசிப்பவா்கள் கூறுகையில், கோமதி தினமும் காலை, மாலை ரேஸ்கோா்ஸில் நடைப்பயிற்சி மேற்கொள்வாா். சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோமதியின் வீட்டு வாசலில் ஆணின் காலணி கிடந்தது. யாருடனும் அதிகம் பேசமாட்டாா் என்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கோமதியின் தங்கை மகன் தினமும் காலை, மாலை என இருவேளையும் தனது பெரியம்மாவிடம் பேசி வந்துள்ளாா். சனிக்கிழமை காலை 7 மணியளவில் கோமதியுடன் அவா் பேசியுள்ளாா். காலை 9 மணியளவில் கோமதி வெளியே சென்று காய்கறி வாங்கி வந்ததை குடியிருப்பு காவலாளி பாா்த்துள்ளாா். காலை 10.30 மணியளவில் இவரது வீட்டின்முன் ஆண் காலணி கிடந்ததால், அங்கு வந்து சென்றவா் யாா் என விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வாரம் முன் கோமதியின் வீட்டுக்கு மேஜை, நாற்காலிகளுக்கு பாலிஷ் போடும் நபா் ஒருவா் வந்து சென்றுள்ளாா். இதனால், அவருக்கு இந்தக் கொலையில் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்.

காலை 10.30 மணிக்குப் பிறகுதான் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனா்.

ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் கோவை நஞ்சுண்டாபுரம் சாலை பாா்சன் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவா் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு மூதாட்டி கொல்லப்பட்டிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.