ஈரோடு

கலாசார மாற்றத்தால் குறையும் லுங்கி வர்த்தகம் உற்பத்தியாளர்கள் கவலை

கலாசார மாற்றம் காரணமாக லுங்கி வர்த்தகம் படிப்படியாக குறைந்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஜெபலின்ஜான்

கலாசார மாற்றம் காரணமாக லுங்கி வர்த்தகம் படிப்படியாக குறைந்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 லுங்கியைப் பொருத்தவரை சாதாரண லுங்கி (செக்ட் லுங்கி), பிரின்ட்டட் லுங்கி என இரு வகைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாதாரண லுங்கிகள் தமிழகம் முழுவதும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பிரின்ட்டட் லுங்கியில் 90 சதவீதம் ஈரோடு நகரில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

 தமிழகத்தில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, பல்லடம், சோமனூர், குடியாத்தம், காஞ்சிபுரம், பனப்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் லுங்கிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் சாதாரண லுங்கிகளில் 60 சதவீதம் ஈரோடு சந்தை மூலம்தான் விற்பனை செய்யப்படுகிறது.

 ஈரோட்டில் இருந்து கர்நாடகம், கேரளம், ஒடிஸா, பிகார், மகாராஷ்டிரம், புதுதில்லி, புதுவை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லுங்கி விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிருக்கும் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் சென்னை மொத்த வியாபாரிகள் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் லுங்கியை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

 ஓராண்டுக்கு சுமார் ரூ. 500 கோடி வரை இத்தொழிலில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாதாரண லுங்கி தயாரிக்கத் தேவையான நூல் விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்றம், இறக்கம், சுற்றுச்சூழல் பிரச்னையால் சாயஆலைகள் இடிக்கப்பட்டு வருவது, மடிப்பதற்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் லுங்கி உற்பத்தித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல, பிரின்ட்டட் லுங்கி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான பசை மாவு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பிரின்ட்டட் லுங்கி உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இப்போது கலாசார மாற்றத்தின் காரணமாக லுங்கி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, கனிமார்க்கெட் வார ஜவுளிச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது: பிரிண்ட்டட் லுங்கி ரூ. 90 முதல் ரூ. 160 வரையும், செக்ட் லுங்கி ரூ. 85 முதல் ரூ. 140 வரையும் (மொத்த விலை), ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கிகள் ரூ. 90 முதல் ரூ. 200 (மொத்த விலை) வரையும் விற்பனை செய்யப்படுகிறது. நைட் பேன்ட் ரூ. 120 முதல் ரூ. 180 வரையும், பெர்முடாஸ் ரூ. 60 முதல் ரூ. 110 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

 லுங்கித் தொழிலுக்கு அடிப்படைத் தேவை சாயமேற்றுதல் ஆகும். சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக 200-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் அகற்றப்பட்டுவிட்டதால் இப்போது சாயமேற்றுவதற்கான கட்டணம் அதிகரித்துவிட்டது.

 எனவே, இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 லுங்கி உற்பத்தியாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுடன், லுங்கியைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

நைட்பேன்ட், பெர்முடாஸை நாடும் இளைஞர்கள்

 இதுகுறித்து, பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லுங்கி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:

 தமிழகத்தில் மொத்த லுங்கி உற்பத்தியில் 60 சதவீதம் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில்தான் உற்பத்தியாகிறது. இதில், 80 சதவீதம் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் வளர் இளம் பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை வீடுகளில் இருக்கும்போது லுங்கி அணியும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது வளர் இளம் பருவத்தினர் லுங்கிக்குப் பதிலாக நைட்பேன்ட், பெர்முடாஸ் ஆகியவற்றை அணிந்து கொள்கின்றனர்.

 பெருநகரங்களில் இருக்கும் திருமணமானவர்கள், முதியவர்கள் கூட கலாசார மாற்றத்தால் லுங்கி அணிவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், லுங்கி உற்பத்தி, வர்த்தகம் ஆண்டுதோறும் 10 சதவீதம் வரை குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் லுங்கி என்னும் ஆடை என்பதே யாருக்கும் தெரியாத நிலை உருவாகிவிடும். லுங்கி வர்த்தகம் சரிந்து வருவதைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT