தமிழகத்தில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி ஈரோடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.
அதன்பின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நூறு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு நூறு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் 150 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு ரூ. 26 ஆயிரத்து 932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு ரூ. 27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சமும், உயர் கல்விக்காக ரூ. 4 ஆயிரத்து 342 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்களிலும் கல்வித் துறைக்காக இவ்வளவு அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்படுவது கிடையாது. இந்த அரசின் ஓர் ஆண்டு சாதனையானது 100 ஆண்டுகள் சாதனையாகத் திகழ்கிறது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்காக 312 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு, 70 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் இடம் பெற்று உள்ளனர். இவர்களுக்குத் தேர்வு முடிந்தவுடன் உடனடியாகப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் விவசாயிகள் பாராட்டும் வகையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு வழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஈரோட்டில் இருந்து நீலகிரி வரை நான்கு வழிச் சாலை அமைக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் பொது நூலகத் துறை சார்பில் ஈரோடு, சம்பத் நகர் நவீன நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்துவைத்து, மையத்துக்குத் தேவையான புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார்,
முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், அ.தி.மு.க. அவைத் தலைவர் பி.சி.ராமசாமி, பகுதிச் செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.