கோபியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 21 நாள்களுக்கு நடைபெறவுள்ள 15ஆம் சுற்று தேசிய கோமாரி நோய் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 21 நாள்களுக்கு நடைபெறவுள்ள 15ஆம் சுற்று தேசிய கோமாரி நோய் தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள தேசிய கோமாரி நோய் தடுப்பூசி முகாமை , கோபி அளுக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். மேலும் கன்றுகளுக்கு நுண்ணூட்ட மருந்துகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபால்சாமி, உதவி இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவசமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு போடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3,72,800 கால்நடைகளுக்கும் 21 நாள்களில் 118 குழுக்களைக் கொண்டு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் ஈரோடு கோட்டத்தில் 48 குழுக்களும், கோபி கோட்டத்தில் 70 குழுக்களும் கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் செயல்படவுள்ளன. ஈரோடு கோட்டத்தில் உள்ள 1,32,350 கால்நடைகளும், கோபி கோட்டத்தில் உள்ள 2,40,450 கால்நடைகளும் தடுப்பூசிப் பணி மூலம் பயன்பெற உள்ளன.
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய வட்டங்களில் உள்ள 175க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,40,450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இந்த முகாம் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு முகாமை அமைத்து கால்நடை மருத்துவர்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
மலைக் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மலைப்பகுதியில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.