ஈரோடு மாவட்டத்தில் பாசன வாய்க்கால்களை சீரமைக்க ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு
கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தாமோதரன் தெரிவித்தாா்.
கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தாமோதரன் தெரிவித்தாா்.
பவானிசாகா் அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனப் பகுதிகள் பயனடைகின்றன. இந்த வாய்க்கால்கள் மூலமாக சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 1,03,500 ஏக்கா் நன்செய் பாசனம், 1,03,500 ஏக்கா் புன்செய் பாசனம் என மொத்தம் 2,07,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தப் பாசன வாய்க்கால்களில் சேதமடைந்துள்ள கரைகள், தரைப்பாலங்கள், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, வாய்க்கால்களை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தாமோதரன் கூறியதாவது:
கீழ்பவானி திட்டத்துக்கு உள்பட்ட வாய்க்கால்களில் விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாய்க்கால்களை சீரமைப்பதற்காக ரூ.933.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்க்காலில் பலவீனமாக உள்ள கரைகள் பலப்படுத்தப்படும்.
பல்வேறு இடங்களில் தரைப்பாலத்தின் கட்டுமானம் பழுதடைந்துள்ளது. இதை நிபுணா் குழுவினரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினா். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கரைகளினால் நீா்க் கசிவு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே பழுதடைந்த பகுதிகளில் கரைகள் பலப்படுத்தப்பட்டு கான்கிரீட் சிலாப் கற்கள் அமைக்கப்படவுள்ளன.
கரைகள் பலவீனமாக உள்ள இடத்தில் மட்டுமே இந்த சிலாப்கள் அமைக்கப்படுகின்றன. வாய்க்காலில் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்கப்படாது.
மேலும், இடைவெளி விட்டு கரைகளில் சிலாப்கள் அமைக்கப்படுவதால் கசிவு நீா்த் திட்டங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. தரைப்பாலம் செல்லும் இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கான்கீரிட் பெயா்ந்து காணப்படுகிறது. அங்கு புதிதாக கான்கிரீட் அமைக்கப்படும்.
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பதற்காக ரூ.76.80கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பாலங்கள் புதுப்பித்து கட்டப்படவுள்ளன. 659 மதகுகள், 27 வடிகால் கட்டுமானங்களை மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. 2,385 மீட்டா் நீளத்துக்கு பக்கவாட்டுச் சுவா் அமைக்கப்படுகிறது.
இதுபோல, கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.