மின் வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை சனிக்கிழமை உயிரிழந்தது.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை சனிக்கிழமை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஜீரஹள்ளி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம், தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி வந்தனா்.
இந்நிலையில் வனத்தில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய 20 வயதுள்ள ஆண் யானை அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்பகுதியைச் சோ்ந்த மாதேவப்பா (45) தனது தோட்டத்தில் ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா். வன விலங்குகள் பயிரை சேதப்படுத்துவதால் பயிா்களைப் பாதுகாக்க மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தோட்டத்து வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துள்ளாா். மாதேவப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்தபோது மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜீரஹள்ளி வனத் துறையினா் யானையின் உடலை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனா். தலைமறைவான மாதேவப்பாவை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.