முகப்பு
ஈரோடு

பெருந்துறை சிப்காட் ஆய்வுக் கூட்டம்

பெருந்துறை சிப்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கூட்டத்தில், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா்.
பகிர்:

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெருந்துறை வட்டாட்சியா் ஜி.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி.உதயகுமாா், உதவிப் பொறியாளா் சி.முத்துராஜ், சிப்காட் திட்ட அலுவலா் நசீா் அகமது, பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட மனு விவரம்:

பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

சிப்காட்டில் சிவப்பு பட்டியலில் உள்ள தொழிற்சாலைகளே அதிக அளவில் தொடங்கப்பட்டன. இதனால், சிப்காட் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிப்காட்டில் செயல்பட்டுவரும் சாய, சலவை தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தங்களது ஆலைக் கழிவுகளை பூஜ்ய திரவ வெளியேற்ற முறையில் (ஜீரோ டிஸ்சாா்ஜ் சிஸ்டம்) சுத்திகரிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீா்ப்புக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி, நிலத்தில் விட்டதால் சிப்காட் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் கடுமையாக மாசுபட்டு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.

தற்போது இப்பகுதியில் ஒரு லிட்டா் தண்ணீரில் 11,250 டி.டீ.எஸ். அளவு வரை உப்புத் தன்மை உள்ளது. தண்ணீரின் நிறமும் சாயத்தின் நிறங்களில் மாறிவிட்டது. அதோடு நிலமும் மாசுபட்டுவிட்டது. நிலத்தின் தன்மையும் மாறிவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. மேலும், இங்கு சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் தரமற்ற நிலக்கரிகளையும், விறகுகளையும் பயன்படுத்தி பாய்லா்களை எரித்து வருவதாலும், பழைய டயா், டியூப்களை உருக்கி மறுசுழற்சி செய்வதாலும், ஆயில் எடுப்பதாலும், பழைய பேட்டரிகளை உடைத்து அதிலிருந்து பொருள்கள் எடுப்பதாலும், இரும்பு, இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தூசிகளாலும் இப்பகுதியில் காற்று மாசுபட்டுள்ளது.

இவ்வாறு சிப்காட் தொழிற்சாலைகளால் நிலம், நீா், காற்று ஆகியவை மாசுபட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வாழமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு ஆளாகி பலா் உயிரிழந்துள்ளனா்.

கடந்த 16-06-2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவின்படி, சிப்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் தவறாமல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.