பவானிசாகா் அணையில் இருந்துகீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால் 16 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால் 16 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஆண்டு போதிய நீா் இருப்பு இருந்ததால் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நெல் பயிரிடுவதற்காக தண்ணீா் திறக்கப்பட்டது. தண்ணீா் திறப்புக்கான காலம் கடந்த டிசம்பா் 12ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நீா் திறப்பை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து டிசம்பா் 27 வரை தண்ணீா் திறப்பு நீட்டிக்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட 2,200 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே பவானி ஆற்றில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது குடிநீா் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் வழியாக வெளியேறும் தண்ணீரின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 16 மெகாவாட் நீா் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.