முகப்பு
ஈரோடு

இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் தவிக்கும் அந்தியூர் மக்கள்

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அந்தியூர் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிக்க குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
பகிர்:

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அந்தியூர் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிக்க குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 7,000 குடியிருப்புகளும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். அந்தியூர் பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பேரூராட்சியில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், அந்தியூர் பகுதியில் கடந்த 16 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பொதுமக்கள் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தொலைபேசியிலும், நேரிலும் சென்று கோரிக்கை விடுத்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அந்தியூர் பகுதி மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் தண்ணீர் விற்பனையாளர்களிடம்  வாங்கும் போது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ரூ.300 செலவாகிறது. கடந்த 6  மாத காலம் உழைப்பும், ஊதியமும் இல்லாமல் குடும்பம் நடத்தவே தடுமாறும் நிலையில் தண்ணீருக்கான கூடுதல் சுமை வேதனையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அந்தியூர் பகுதி மக்கள்.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி கூறுகையில்,  “பவானி ஆற்றில் அத்தாணி பகுதியிலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாய், தனியார் செல்போன் நிறுவனம் கேபிள் பதிக்கும் பணியால் 6 அடி ஆழத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை, சீரமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான உடைப்புகள் சரிசெய்ய ஏற்றப்பட்ட நிலையில் தற்போது குடிநீர் விநியோகம் முதல் கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், பாக்கியுள்ள இரு இடங்களில் குழாய் உடைப்புகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து உடைப்புகளும் சரிசெய்யப்பட்டு ஓரிரு நாள்களில் குடிநீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும்.” என்றார். 

அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் தண்ணீரையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளதால், குழாயில் உடைப்பு ஏற்படும் நேரங்களில் மாற்று ஏற்பாடு செய்து அடிப்படைத் தேவையான குடிநீரை விநியோகிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →