ஈரோடு மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அளிப்பு
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதினை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதினை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று, சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். ஆனால் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவால் 7 நாள் துக்கம் காரணமாக நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
இதில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ராமசாமி, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோபிநாத், காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ்பால், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நடராஜன், வளையபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தன பாக்கியம், ஏழூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி, வீரணாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சத்தியசெல்வி, புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, சாவக்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி, கொண்டப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, சித்தோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முத்துகிருஷ்ணன் ஆகிய 13 பேர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணியன், ஈஸ்வரன், ராஜாகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கவிதா, முதன்மைக் கல்வி அலுவலர் ரா. பாலமுரளி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.