ஈரோடு, விருதுநகரில் பொதுசுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் கே.சி.கருப்பணன்
தமிழகத்தில் ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த 3 மாதத்தில் துவங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்
தமிழகத்தில் ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த 3 மாதத்தில் துவங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களும் பெரும்பாலனோர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால், மாவட்டத்தில் 3.42 லட்சம் ரேஷன் கார்டுதார்களுக்கு 19.83 லட்சம் முகக்கவசம் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இன்று 1.50 லட்சம் முகக்கவசம் வழங்கப்படுகிறது.
கரோனா பரிசோதனை நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் இறப்பு சதவீதம் மிகக்குறைவு. தமிழகத்தில் நீர் நிலைகளில் சாயக்கழிவு கலக்கும் பிரச்னையை தீர்க்க ரூ.1,100 கோடி திட்ட மதிப்பீட்டில் 9 பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதில், 2 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. இதனால், முதல்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் திட்ட பணிகள் துவங்கப்படும். அடுத்த 3 மாதத்தில் பணிகள் டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றார்.