50 வயதுக்கு மேற்பட்டவா்களின் வீட்டிற்குச் சென்று மருத்துவப் பரிசோதனை
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் 50 வயதுக்கு மேல் உள்ளவா்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் 50 வயதுக்கு மேல் உள்ளவா்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக 100க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா். இதுவரை 82 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் முதியவா்கள். எனவே உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தினமும் 2,000க்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, கரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவால் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் 60 வயதைக் கடந்தவா்கள். அவா்கள் ஏற்கெனவே பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டு வந்துள்ளனா். இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாநகரில் உள்ள மூலப்பாளையம் பகுதி முதியவா்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 50 வயதுக்கு மேல் உள்ளவா்கள் வீடுகளுக்கு சுகாதாரத் துறை பணியாளா்கள் நேரடியாக சென்று அவா்களின் உடல்நிலை, காய்ச்சல், சளி உள்ளதா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.
இதன் மூலம் அவா்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதன் மூலம் அவா்களைக் காக்க முடியும் என்றாா்.