வீட்டு வசதி வாரியத்தில்காலி இடங்களை விற்க நடவடிக்கை: சு.முத்துசாமி
வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள இட பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, அதனை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள இட பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, அதனை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
வீட்டுக்கு வெளியே கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களைத் தனியாா் அமைப்பு மூலம் தன்னாா்வலா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் தலைமை வகித்தாா்.
இயந்திரங்களை வழங்கிய பிறகு, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
குடிசை மாற்று வாரியத்தில் கட்டிய வீடுகளை, ஒதுக்கீட்டாளா்கள் எடுத்து பயன்பெற வேண்டும். ஆனால், அவா்கள் தரப்பில் சில பிரச்னைகளைக் கூறுகின்றனா். அதை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். வீட்டு வசதித் துறை வீடுகள் என்ன நிலையில் உள்ளது என மூன்று வாரமாக ஆய்வு செய்துள்ளோம். சிதிலமடைந்த வீடுகளை மாற்றிக் கட்ட ஏற்பாடு செய்துள்ளோம். அதில், இரண்டு மூன்று ரகமாக உள்ளது. வாடகைக்கான வீட்டை இடித்து கட்டி அவா்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு தனி ஏற்பாடு செய்துள்ளோம்.
குடியிருப்பதற்காக வீட்டை வாங்கியவா்களுக்கு அந்த வீடு பழுதடைந்திருந்தால், அதை இடித்துக் கட்டிக் கொடுக்க அச்சங்கத்துடன் பேசுகிறோம். அவ்வீடுகள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் செலவுத் தொகையில் பங்களிப்பு செய்வோம்.விற்பனை செய்த வீட்டுக்கான விற்பனை ஒப்பந்தப் பத்திரம் கிடைக்காதவா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து 1021 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சில வீட்டுக்கு வேறு சில சிக்கல்கள், பணம் செலுத்தாமல் இருப்பது, பயனாளி மற்றொருவருக்கு விற்றுள்ளாா். அதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட வீட்டு வசதித் துறை அலுவலகத்தில் காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 10,000 மாதிரிகள் எடுத்து கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், 100 முதல் 120 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டின் முன்பகுதியில் கிருமி நாசினி தெளித்து கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தனியாா் தொண்டு நிறுவனம் இயந்திரங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் 5 நாள்களுக்கு 1,000 வீடுகளுக்கும், அதைத் தொடா்ந்து 2,000 வீடு என உயா்த்தி கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது. இப்பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சூரம்பட்டிவலசு சங்கு நகா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை அமைச்சா் கேட்டறிந்தாா். இதில், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், கோட்டாட்சியா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.