தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தலைவா்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருவதால் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தலைவா்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருவதால் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக பேரவைத் தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக , தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
திமுத தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், 6-ஆவது கட்ட பிரசாரத்தை தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திருப்பூா் வந்தவர் உறவினா் வீட்டில் தங்கினார். அதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை திருப்பூரில் நஞ்சப்பா மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
தொடா்ந்து மாலையில் திருப்பூா் பாண்டியன் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டுகிறாா்.
இந்த நிலையில், திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள எஸ்.ஏ.பி தியேட்டர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்திற்குள் முதல்வர் திடீரென சென்றார். முதல்வரின் இந்த எதிர்பாராத வருகையால் தொழிலாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அங்கு பனியன் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் முதல்வர் கனிவுடன் கலந்துரையாடினார்.
பணியில் இருந்த பெண்களிடம், "மாதம் ரூ.1000 உரிமைத் தொகை சரியாக வருகிறதா?" என்றும், "விடியல் பயணம் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?" என்றும் முதல்வர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்கிருந்தவர்களிடையே அவர் பேசியதாவது:
மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மேலும், ரூ.8000 மதிப்பிலான பரிசு டோக்கன்கள் வழங்கப்படும், அதன் மூலம் உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடுத்த ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும்," என தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை விளக்கிக் கூறினார்
அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் தங்கள் பகுதி சார்ந்த மற்றும் வாழ்வாதார ரீதியான சில கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட முதல்வர், தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது பல்லடம் தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மோடி - ராகுல் வருகை: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் சாலைப் பேரணி நடத்திய நிலையில் தற்போது 2-ஆவது கட்டமாக கோவைக்கு சனிக்கிழமை வருகை தருகிறாா். அதேபோல, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல்காந்தியும் சனிக்கிழமை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அடுத்தடுத்து வரும் நாள்களில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ள நிலையில், தமிழக தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Regarding the election arena heating up as leaders conduct whirlwind campaigns ahead of the Tamil Nadu Legislative Assembly elections...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.