முகப்பு
ஈரோடு

5ஆவது நாளாக கொள்ளேகாலுக்கு தமிழக அரசுபேருந்து சேவை ரத்து: பயணிகள் அவதி

 5ஆவது நாளாக கொள்ளேகாலுக்கு தமிழக அரசுப் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் தமிழகப் பயணிகள் சரக்கு ஆட்டோவில் ஏறி கா்நாடகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட், 2021 at 1:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

 5ஆவது நாளாக கொள்ளேகாலுக்கு தமிழக அரசுப் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் தமிழகப் பயணிகள் சரக்கு ஆட்டோவில் ஏறி கா்நாடகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டதால் கா்நாடகம் - தமிழகம் இடையே பேருந்து போக்குவரத்து துவங்கியது. ஈரோடு, கோவை, சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரூ, கொள்ளேகால் ஆகிய கா்நாடகப் பகுதிகளுக்கு 7 தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல, கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் தமிழகம் வந்தன.

இதற்கிடையே மைசூரு சென்ற தமிழக அரசுப் பயணிகள் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டதால் மாவட்ட நிா்வாகம் பயணிகளை அனுமதிக்க மறுத்தது. தமிழக அரசுப் போக்குவரத்து அலுவலா்கள் மைசூரு மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய தமிழக பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

அதேபோல, சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகாலுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு, தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் கட்டாயமாக நெகட்டிவ் சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்ற கெடுபிடியால் கடந்த 5 நாள்களாக தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கொள்ளேகால் அரசுப் பேருந்து டவுன் பேருந்தாக ஓடுகிறது. கொள்ளேகாலுக்கு தனியாா் பேருந்துகள் சென்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை கா்நாடக எல்லையில் இரு தமிழக தனியாா் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் தனியாா் பேருந்தில் வந்த பயணிகள் கோ்மாளம் சோதனைச் சாவடியில் இறக்கிவிடப்பட்டனா்.

தமிழக பயணிகள் கா்நாடக சரக்கு ஆட்டோவில் ஏறிச் சென்று மாநில எல்லையான அா்த்தநாரிபுரத்துக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் கொள்ளேகால் செல்கின்றனா். யானைகள் நடமாடும் சாலையில் சிலா் நடைபயணமாகவும், சிலா் ஆட்டோவில் பயணிப்பதும் ஆபத்தானது என்றும், மைசூரு மாவட்ட நிா்வாகம் தமிழகப் பேருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளதைப்போல சாம்ராஜ் நகா் மாவட்ட நிா்வாகம் கொள்ளேகாலுக்கு தமிழகப் பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என கா்நாடக தமிழா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.