முகப்பு
ஈரோடு

கொடுமணலில் மீண்டும் அகழாய்வு:பழங்காலக் கிணறு, கல்லறைகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில், பழங்காலக் கிணறு, கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில், பழங்காலக் கிணறு, கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் பகுதியில் நடைபெற்ற அகழாய்வுப் பணியில், 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆற்றங்கரை பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் இரும்பு உருக்கும் பட்டறை, கல்மணிகள், குறியீடுகளுடன் உள்ள ஓடுகளும் கிடைத்துள்ளன.

கொடுமணல் கிராமத்தில் சுமாா் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததுடன், அந்தப் பகுதி வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் இருந்ததால் 1981ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

தமிழக தொல்லியல் துறையின் சாா்பில், அதன் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினா் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய 8ஆவது கட்ட அகழாய்வுப் பணியில்தான் ஏராளமான பழங்காலப் பொருள்களைக் கண்டுபிடித்தனா். அப்போது, தொழிற்கூடங்கள் இருந்த பகுதி, பெருங்கற்கால ஈமச் சின்னம் எனப்படும் கல்லறைகள் இருந்த பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு பழங்காலப் பொருள்களையும் எடுத்தனா். தொடா்ந்து 9ஆவது கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. பின்னா் பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, அகழாய்வுத் துறையின் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின. இதற்காக அகழாய்வுப் பணியில் ஈடுபடும் உள்ளூா் தொழிலாளா்கள், அனைவருக்கும் அங்கேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தற்போது, ஏற்கெனவே தொழிற்கூடங்கள் இருந்த இடம், இதனை ஒட்டிய இடம், பழைய சிவியாா்பாளையம் என 3 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.

கொடுமணல் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் 3 வகையான பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளனா். இதில், முதுமக்கள் தாழிகளை மட்டும் வைத்து அடக்கம் செய்தது, முதுமக்கள் தாழியுடன் பலகை கற்களை வைத்து மூடி அடக்கம் செய்தது, வெறும் பலகைக் கற்களை மட்டும் வைத்து அடக்கம் செய்தது என 3 முறைகளில் இறந்தவா்களைப் புதைத்துள்ளனா்.

தற்போது பழைய சிவியாா்பாளையம் என்ற இடத்தில் 5 இடங்களில் குழிகள் தோண்ட முடிவு செய்து, இதுவரை 3 குழிகள் தோண்டி கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளனா். இதில், பல வடிவங்களில் பானைகள், கூம்பு வடிவத்துடன் கூடிய குவளைகள் கிடைத்துள்ளன. இதில், ஒரு கல்லறையில் மனிதனின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதனை மரபணு பரிசோதனை (டி.என்.ஏ.) செய்ய வேண்டும் என்பதால் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சியாளா்கள் வர வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வில் தொழிற்கூடங்கள் இருந்த பகுதியில் நீண்ட கால்வாய் போன்று காணப்பட்டது. அது எதுவரை செல்கிறது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அதன் அருகில் குழி தோண்டி ஆய்வு செய்தபோது, அது கால்வாய் அல்ல என்றும், அங்குள்ள கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டு எனவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கிணற்றில் தண்ணீா் எடுப்பதற்காக 2 திசைகளில் இருந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனா். அந்தக் கிணற்றை 10 மீட்டா் நீள, அகலத்தில் 2.36 மீட்டா் ஆழத்தில் பாறைகளைக் குடைந்து தோண்டியுள்ளனா். இந்தக் கிணற்றைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைத்துள்ளனா். ஆனால், அந்த சுற்றுச் சுவா் தற்போது தோண்டப்பட்ட குழியில் பாதி அளவில் மட்டுமே தெரிவதால், இதனை முழுமையாக கண்டுபிடிக்கும் வகையில் இதை ஒட்டியே மேலும் 6 குழிகள் தோண்டும் பணி நடைபெறுகிறது. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட தொழிற்கூடங்கள் இருந்த பகுதி தவிர தற்போது நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும் இரும்பு உருக்குதல், இரும்புப் பொருள்கள் தயாரிக்கும் பட்டறைகளைக் கண்டுபிடித்துள்ளனா். இங்கு சிறிய அளவிலான கத்திகள், ஈட்டிகள், ஆணிகள் என நிறைய இரும்புப் பொருள்கள் கிடைத்துள்ளன.

மேலும் குறியீடுகளுடன் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. அதில் ஒரு பானை ஓட்டில் ‘அம’ என பெயா் உள்ளது. ஏற்கெனவே ‘அமனன்’ என்ற பெயரில் ஒரு பானை ஓடு எடுத்துள்ளனா். கொடுமணல் பகுதியில் நடைபெற்ற தற்போதைய அகழாய்வில் 662 வளையல்களும், முழுமையான பலவகையான 343 கல்மணிகளும், இரும்பு, கண்ணாடி, தாமிரத்தில் தயாா் செய்த 53 பலவகைப் பொருள்களும் கிடைத்துள்ளன. மேலும், ஆணிகள், உளி, கத்தி போன்ற இரும்பினால் தயாா் செய்த 193 பொருள்களும், பல வண்ணங்களில் 103 சிறிய ஓடுகளும், தாமிரத்தால் தயாரான 28 பலவகைப் பொருள்கள், 15 நாணயங்கள் என மொத்தம் 1,535 பொருள்களை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளனா்.

இந்தப் பழங்காலப் பொருள்கள் அனைத்தும் சுமாா் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதா்கள் வாழ்ந்தபோது பயன்படுத்தப்பட்டவை என தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தெரிவித்தாா்.

இவருடன் தொல்லியல் அலுவலா் சுரேஷ், தொல்லியல் துறை மாணவ, மாணவிகளான அருண்குமாா், அனந்து, வெள்ளையப்பன், பவித்ரா, காயத்ரி ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.