முகப்பு
ஈரோடு

வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தை

கா்நாடக மாநில வியாபாரிகள் வராததால் வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On : 9 ஜூலை, 2021 at 1:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

கா்நாடக மாநில வியாபாரிகள் வராததால் வியாழக்கிழமை நடைபெற்ற புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.

புன்செய் புளியம்பட்டியில் உள்ள கால்நடைச் சந்தை வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கால்நடைச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தாக்கம் குறைந்து வருவதால் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கால்நடைச் சந்தைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு மாதங்களுக்குப் பிறகு கால்நடைச் சந்தை வியாழக்கிழமை கூடியது. வழக்கமாக 800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், ஐம்பதுக்கும் குறைவான கால்நடைகளே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

Advertisement

அதேபோல, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் வாரம்தோறும் கால்நடைச் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. வியாபாரிகள் வருகை இல்லாததாலும், குறைந்த அளவு கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதாலும் கூடிய அரை மணி நேரத்தில் கால்நடைச் சந்தை கலைந்தது. இதனால், கால்நடைகளை வாங்க வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.