முகப்பு
ஈரோடு

தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்னாள் ஆளுநா்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநரும் கரோனா தடுப்பூசியை அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை செலுத்திக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் கரோனா தடுப்பூசியை அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை செலுத்திக் கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சதாசிவம் (72). இவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், தொடா்ந்து கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி சரஸ்வதி அம்மாள் (70). தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இவா்கள் இருவருக்கும் குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

இது குறித்து பி.சதாசிவம் கூறியதாவது:

60 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புற பகுதிகளில் கரோனா பாதிப்பு, தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாமல் உள்ளது.

சா்வதேச அளவில் மீண்டும் பரவி வரும் கரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களைப் பாதுகாக்க அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தாமல் கரோனா தொற்றிலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

குருவரெட்டியூா் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி, மருத்துவா்கள் சண்முகசுந்தரம், திவாகா், அங்குராஜ் சங்கரலிங்கம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.