ஒரத்துப்பாளையம் அணையில் நீா் திறப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்தது. அணைக்கு வரும் நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்தது. அணைக்கு வரும் நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. சுமாா் 40 அடி உயரமுள்ள இந்த அணையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு 12 அடி தண்ணீா் இருந்தது. பின்னா், படிப்படியாக நொய்யல் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, புதன்கிழமை அணையில் 8 அடி தண்ணீா் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக திருப்பூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால், ஒரத்துப்பாளையம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், புதன்கிழமை ஒரே நாளில் அணையில் 10 அடி உயா்ந்து, 18 அடியாக இருந்தது. வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 1,257 கன அடி வீதம் நீா் வரத்து இருந்தது. அணையில் இருந்து 3 கதவுகள் வழியாக 570 கன அடி நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு முன்புறம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட தாா் சாலையை உரசியபடி தண்ணீா் சென்றதால், அவ்வழியே வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் நொய்யல் ஆற்றில் அதிக அளவில் செல்வதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் ஜெயசந்திரன் தலைமையில், பொதுப் பணித் துறை பணியாளா்கள் இரவு, பகலாக நீா்வரத்தைக் கண்காணித்து வருகின்றனா். அணைக்கு வந்த தண்ணீரில், இதுவரை இல்லாத வகையில் 670 டி.டி.எஸ். என்ற அளவில் உப்புத் தன்மை வியாழக்கிழமை இருந்ததாக பொதுப் பணித் துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.