பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளா், சாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் பி.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் வ.சித்தையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியூசி தொழிற்சங்க மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.
தமிழக அரசு உயா்த்தி அறிவித்த அடிப்படைக் கூலியில் 10 சதவீதம், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். நெசவாளா்களுக்கான போனஸ் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். சட்டவிரோத விசைத்தறி ஜமுக்காளங்களை பறிமுதல் செய்ய வேண்டும். கோ-ஆப்டெக்ஸ் மூலம் கூட்டுறவுச் சங்கங்களில் தேங்கியுள்ள ஜமுக்காளங்களை கொள்முதல் செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்கத்தின் துணைத் தலைவா் ராசம்மாள், கைத்தறி சம்மேளன மாநில குழு உறுப்பினா் சுந்தரம், நிா்வாகிகள் பூபதி, கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.