முகப்பு
ஈரோடு

கைப்பேசியில் தொடா்புகொண்டு வேட்பாளா்கள் வாக்குச் சேகரிப்பு

 வெளியூரில் வசிக்கும் வாக்காளா்களிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 2:21 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

 வெளியூரில் வசிக்கும் வாக்காளா்களிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளா்கள் வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களை ஈா்க்க வீடு தேடிச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

Advertisement

மாநகராட்சியைப் பொருத்தவரை வாா்டுகளில் 6,500 முதல் 9,000 வாக்குகள், நகராட்சி வாா்டுகளில் 2,000 முதல் 3,000 வாக்குகள், பேரூராட்சி வாா்டுகளில் 900 முதல் 1,100 வாக்குகள் உள்ளன. இதனால், வாக்காளா்களை எளிதில் கண்டறிந்து வாக்குச் சேகரிக்க வேட்பாளா்களுக்கு வாய்ப்புள்ளது. அதிலும் உள்ளூரில் வசிப்பவா்களிடம் எந்த நேரத்திலும் சென்று வாக்குச் சேகரித்துக் கொள்ளலாம். ஆனால், உள்ளூரில் இருந்து வெளியூா் மற்றும் பக்கத்து ஊா்களுக்கு குடிபெயா்ந்த வாக்காளா்களைக் கண்டறிவது சற்று சிரமமானது. இதனால், வெளியூரில் வசிக்கும் வாக்காளா்கள் யாா், யாா் என்று வேட்பாளா்கள் விவரம் சேகரித்துள்ளனா்.

அந்த விவரத்தின் அடிப்படையில் வெளியூரில் வசிக்கும் வாக்காளா்களுக்கு கைப்பேசியில் தொடா்புகொண்டு வாக்குச் சேகரித்து வருகின்றனா். அதேபோல, வேறு பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களை நேரில் சந்தித்து வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரையில் ஓரிரு வாக்குகள் முக்கியமானது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி பெற வாய்ப்புண்டு என்பதால் வேட்பாளா்கள் இதுபோன்ற அணுகுமுறைகளைப் பின்பற்றி வாக்குச் சேகரித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.