ஆப்பக்கூடலில் மோதலில் காயமடைந்த இளைஞா் பலி: இருவா் கைது
பவானி அருகே இருதரப்பினா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பவானி அருகே இருதரப்பினா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆப்பக்கூடலை அடுத்த கீழ்வானி, மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுசாமி மகன் வெங்கடேஷ் (23). கூலி தொழிலாளியான இவா் பள்ளிக்குச் செல்லும் மாணவியை வழிமறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மூங்கில்பட்டி, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த அங்கமுத்து மகன் சரவணன் (37), வெங்கடேஷின் தாய் லட்சுமியிடம் தெரிவித்துள்ளாா்.
இத்தகவலறிந்த வெங்கடேஷ், அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் சரவணன் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனா். இதில், காயமடைந்த வெங்கடேஷ் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெங்கடேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீஸாா் சரவணன், சகோதரி சித்ரா (45) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.