முகப்பு
ஈரோடு

1,219 வாக்குச் சாவடிகளுக்கு 4,876 வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமனம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,219 வாக்குச் சாவடிகளுக்கு 4,876 வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2022 at 1:05 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,219 வாக்குச் சாவடிகளுக்கு 4,876 வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது. கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த வாக்குச் சாவடிகளில் கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களுடன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இந்தத் தோ்தலில் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளா்கள், வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னா் உயிரிழந்த 2 வேட்பாளா்கள் அதாவது அத்தாணி மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சிகளில் தலா 1 வாா்டு நீங்கலாக எஞ்சிய 769 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,219 வாக்குச் சாவடிகளுக்கு 4,876 வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்கும் பொருட்டு வெப் கேமராக்கள், தோ்தல் நுண்பாா்வையாளா்கள் 55 போ் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடிகளுக்கு தேவையான தோ்தல் பொருள்கள் அந்தந்த மண்டல அலுவலா்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாவாறு காவல் துறையினா் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளா்களுக்கு முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி வழங்க, வெப்பநிலை பரிசோதனை செய்ய 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.