ஈரோடு

36 ஆண்டுகளுக்குப் பின்..: பவானிசாகரில் ஒரு '96' கதை!

DIN


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1979-இல் 6-ஆவது முதல் 1986-இல் பிளஸ் 2 வரை படித்த மாணவ, மாணவியர் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துத் தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டதுடன் அளவில்லாத மகிழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்து கொண்டனர். 

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986-இல் பிளஸ் 2 வரை படித்து முடித்தபின் வாழ்க்கையெனும் வசந்தத்தைத் தேடித் திசைக்கொருவராகப் பிரிந்தனர் நண்பர்கள். அவ்வாறு சென்ற பலரும் இன்று பல்வேறு துறைகளில் உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 

அவர்களை மீண்டும் சந்திப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம் என அப்போது படித்து தற்போதும் பவானிசாகர் பகுதியில் வசிக்கும் பொறியாளர் வி.பி. மூர்த்தி, வழக்குரைஞர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, வர்த்தகர் சுரேஷ், திருவேங்கடம், செந்தில்குமார், ஆசிரியைகள் மயில்விழி, பூங்கொடி, ஈஸ்வரி ஆகியோரிடம் எண்ணம் உதயமானது.

உடனடியாக இந்தக் குழுவினர் இதைச் செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் தங்களுடன் படித்தவர்கள் யார் யார் என்பதை ஆராய்ந்து அவர்களின் தொடர்பு எண்களைப் பெற்றனர். அதைத் தொடர்ந்து தங்களுடன் படித்த, இடையில் நின்ற அனைவரையும் ஒருவர் விடாமல் தொடர்பு எண்களைப் பெற்று  நீண்ட தொலைவில் உள்ள நண்பர்களுக்கும் தகவல் கொடுத்து ஒருங்கிணைத்தனர்.

கடந்த 2 மாதங்களாகப் பாடுபட்டு பெரும்பாலானவர்களின் தொடர்பு எண்களில் ஒவ்வொருவரையும் தொடர்ந்து கொண்டு பேசினர். இதற்காக வாட்ஸ் ஆப் குழுவொன்று தொடங்கப்பட்டு அனைவரும் குடும்ப ரீதியாக அறிமுகம் செய்து கொண்டனர். 

இதைத் தொடர்ந்து பவானிசாகர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

தாங்கள் படித்த பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைவரும் ஒன்று கூடினர்.  மாணவப் பருவத்தில் ஒவ்வொருவரும் செய்த நினைவிலிருந்த குறும்புகள், மறக்க முடியாத அனுபவங்கள், ஆசிரிய, ஆசிரியைகள் குறித்த விமர்சனங்கள், வகுப்புத் தோழர்கள், தோழியர்கள் உதவிய தருணங்கள்,  விளையாட்டில் மகிழ்ச்சியான தருணங்கள், பள்ளி வாழ்க்கையில் உதவிய ஆசிரியர்கள், அடித்த ஆசிரியர்கள் என கள்ளங்கபடமில்லாத, வாழ்க்கையில் இறக்கும் வரை மறக்க முடியாத தருணங்கள் ஒவ்வொன்றையும் அசைபோட்டபடி அனைவரும் கூடினர். 

தாங்கள் படித்த வகுப்பறைகளுக்குச் சென்று பார்த்துவிட்டு அதில் ஒவ்வொருவரும் அமர்ந்த இடங்களில் அமர்ந்து தங்கள் கடந்த காலத்தை மனதில் அசைபோட்டனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பேசி அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பவானிசாகர் அணைப் பகுதிக்குச் சென்றுவிட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்கள் 35 ஆண்டு கால வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

தங்களின் பள்ளி அனுபவங்கள், தற்போதைய வாழ்க்கை முறை என 36 ஆண்டு கால அனுபவங்கள் அனைத்தையும் 7 மணி நேரத்தில் பகிர்ந்து கொண்டனர். 

பிளஸ் 2 முடித்துவிட்டு இறுதித் தேர்வு எழுதியபின் பிரியும்போது அனைவரும் கண்ணீர்க் கடலில் மூழ்கியது போல இப்போதும் அந்த மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாமல் நெஞ்சில் சுமந்தபடி அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பினர். 

பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் உயர்கல்விக்குத் தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்யவும் அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டனர். குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அனைவரும் சந்தித்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. உடன் படித்தவர்களில் ஒரு சிலரும் ஆசிரியர்களில் சிலரும் இறந்துவிட்டனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அடுத்தமுறை கூடும்போது ஆசிரியர்களை அழைத்துப் பெருமைப்படுத்தவும் தீர்மானித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நினைவுகள் பல ஆண்டுகளுக்காவது மனதை விட்டு அகலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT