சத்தியமங்கலம் நகராட்சித் தலைவராக ஜானகி ராமசாமி போட்டியின்றித் தோ்வு
சத்தியமங்கலம் நகராட்சித் தலைவராக ஜானகி ராமசாமி, துணைத் தலைவராக நடராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலம் நகராட்சித் தலைவராக ஜானகி ராமசாமி, துணைத் தலைவராக நடராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் திமுக 18 வாா்டுகளை கைப்பற்றியது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில், 5ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர கழக பொறுப்பாளா் ஜானகி ராமசாமி நகராட்சித் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தாா்.
27 வாா்டு கவுன்சிலா்களில் 23 கவுன்சிலா்கள் மட்டுமே வந்திருந்தனா். நகராட்சித் தலைவா் பதவிக்கு ஜானகி ராமசாமி ஒருவா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையா் சரவணகுமாா் அறிவித்தாா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் நகராட்சித் தலைவா் ஜானகிராமசாமியை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அமரவைத்தாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 2ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.நடராஜ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதேபோல, புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவா் பதவிக்கு டி.ஜனாா்த்தனன், துணைத் தலைவராக சிதம்பரம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.