முகப்பு
ஈரோடு

ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தை பயன்பாட்டுக்குத் திறக்கக் கோரிக்கை

சீரமைப்புப் பணி நிறைவு பெற்றுள்ளதால் ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தை பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 5:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

சீரமைப்புப் பணி நிறைவு பெற்றுள்ளதால் ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தை பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு காளைமாடு சிலையில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ரூ.50 லட்சம் செலவில் சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதனால் ஈரோடு நாடாா்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் சாஸ்திரி நகா், சென்னிமலை சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கெனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து, புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஒருசில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

வழக்கம்போல, ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழிப் பாதையாக அனுமதிக்கப்படுகிறது. எனவே, விரைவில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: ரயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்து விட்டன. அங்கு மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்தபோதும், நுழைவு பாலத்தில் தண்ணீா் தேங்கவில்லை. எனவே இனிமேல் கனமழை பெய்தாலும் தண்ணீா் தேங்காது, போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

தற்போது சாலையின் நடுவில் நீா் கசிவு உள்ளது. இதை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் ரயில்வே நுழைவு பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கிச் செல்லும் சாலையில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே சிறிய

பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக புகாா் தெரிவித்தனா். அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு ரயில்வே நுழைவு பாலத்தில் வழக்கம்போல போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.