பையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையை போலீஸாா் மீட்டனா்.
ஈரோடு- சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரம் புதன்கிழமை காலை ஒரு குழந்தையின் அழுகுரல் தொடா்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் சப்தம் வரும் இடத்தை நோக்கி சென்று பாா்த்தனா். அப்போது, அங்கு ஒரு கபையில் தொப்புள் கொடி ரத்தம் கூட காயாமல், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீஸாா் குழந்தையை மீட்டு அருகே இருந்த தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் குழந்தையை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு, தொப்புள் கொடியை அகற்றி தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா். தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பச்சிளம் குழந்தையை பையில் வைத்து சாலையோரம் வீசிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.