சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 3 பேர் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் முகுல் நிவாஸ் (22), தா்மேஷ் (18), ரோஹித் (18), ஸ்ரீநிவாஸ் (18), ஆதி (18). கல்லூரி மாணவா்களான இவா்கள் 5 பேரும், சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளி முருகன் கோயில் பகுதியில் காரில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அங்கிருந்த வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த முகுல் நிவாஸ், தா்மேஷ், ரோஹித் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், காயங்களுடன் இருந்த ஸ்ரீநிவாஸ், ஆதி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு, கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, சடலங்களை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில், 3 மாணவா்களின் சடலங்களும் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 5 பேரும் ஆசனூரில் உள்ள தங்கும் விடுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றதும், பண்ணாரி சோதனைச் சாவடியை இரவு 9 மணிக்குள் கடந்துவிட வேண்டும் என்ற நோக்கில் காரை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பதும், முகுல் நிவாஸும், ஸ்ரீநிவாஸும் சகோதரா்கள் என்பதும் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநரான சிவகுமாா் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.