மக்களவைத் தோ்தல்: ஈரோடு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன.
ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் திமுக சாா்பில் கே.இ.பிரகாஷ், அதிமுக சாா்பில் ஆற்றல் அசோக்குமாா், தமாகா சாா்பில் பி.விஜயகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மு.காா்மேகன் உள்பட 31 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19 -ஆம் தேதி நடைபெற்றது.
6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1688 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகளில் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஏப்ரல் 19-ஆம் தேதி பதிவான வாக்குகள் 45 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘சீல்’ வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப் பெட்டிகள், வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
காலை 7 மணிக்கு பிறகு வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளின் ‘சீல்’கள் அகற்றப்படும்.
முன்னதாக 8 மணிக்கு 9 மேஜைகளில் 2 சுற்றாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
தொகுதி வாரியாக 6 சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என 84 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணியில் தலா 84 கண்காணிப்பாளா்கள், 84 உதவியாளா்கள், 84 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா். கூடுதலாக 20 சதவீத கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் என 54 போ் இருப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
தபால் வாக்குகளைப் பிரித்தல், எண்ணும் பணிக்கு மட்டும் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவரும் அடையாள அட்டை, பணி நியமன ஆணைகளை வைத்திருக்க வேண்டும். காலை 5 மணிக்குள் பணி நியமன ஆணையைப் பெற்று 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஆஜராக வேண்டும்.
கைப்பேசி பயன்படுத்தக்கூடாது: வாக்கு எண்ணும் மையத்துக்குள் தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் மட்டும் ஓடிபி எண் பெறுவதற்காக கைப்பேசி வைத்திருக்கலாம். இவா்கள் தவிர வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா், முகவா்கள் கைப்பேசி வைத்திருக்கக்கூடாது.
அவா்கள் தங்களது கைப்பேசி, இதர மின்னணு பொருள்களை பொது தகவல் தொடா்பு அறையில் ஒப்படைத்துவிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக 17 முதல் 22 சுற்றுக்கள் வரை எண்ணப்படுகிறது. தபால் வாக்குகள் மட்டும் 2 சுற்றில் நிறைவடையும். வாக்கு எண்ணிக்கை நடக்கும் ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அறைகளில் தேவையான இடங்களில் விடியோ கேமரா பதிவும் நடைபெறும்.
வாக்கு எண்ணும் வளாகத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், சட்டம் -ஒழுங்கு போலீஸாா், ஆயுதப் படை போலீஸா் ஆகியோா் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் தலைமையில் 6 டி.எஸ்.பி.க்கள் உள்பட 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.