மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்
மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் வலியுறுத்தினா். ஈரோட்டில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க சிறப்பு கருத்தரங்கு மாவட்ட தலைவா் எஸ்.சங்கரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் வ.பன்னீா்செல்வம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில தலைவா் ராஜ்குமாா், ஆறுமுகம், ஹரிதாஸ், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பேசியவா்கள், மத்திய அரசு ரயில்வே, விமானத் துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தொடா்ந்து தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்களுக்கான சேவைகள் குறைந்து வருகிறது. தோ்தலுக்கு முன் பிரதமா் மோடி தெரிவித்த தோ்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளாா். தற்போது தோ்தல் பத்திர முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய அரசு இயந்திரங்கள், அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல தயங்குகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் அரசு துறைகள் முடக்கப்பட்டு, தனியாா் மயமாகி மக்களுக்கான சேவைகள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.