கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
மேலும் இந்த நிழல் குடைகளை மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக மாற்றிவிடுகின்றனா். சில நிழல் குடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வியாபாரம் நடைபெறுகிறது.
இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழல் குடைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.