பரவலாக மழை பெய்துள்ளதால் சின்னவெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆா்வம்
சத்தியமங்கலம், மே 9: சத்தியமங்கலம், தாளவாடியில் பரவலாக பெய்த மழை பெய்துள்ள நிலையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் கொண்டுள்ளனா். இதற்காக வியாழக்கிழமை நடந்த புன்செய்புளியமபட்டி சந்தையில் விதை வெங்காயம் கொள்முதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. இங்கு, ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் விளைநிலங்களில் நடவு செய்யப்படும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை கூடிய புன்செய்புளியம்பட்டி சந்தைக்கு 1000-க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
கடந்த வாரங்களில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதி மற்றும் கா்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். இதன் காரணமாக
சின்ன வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கா்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ் நகா், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சந்தைக்கு வந்திருந்தனா். விவசாய நிலங்களில் நடவு செய்ய அதிக அளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றனா்.
கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.35க்கு விற்ற விதை வெங்காயம், இந்த வாரம் ரூ.50 முதல் ரூ.60 ரூபாய் வரை விற்பனையானது. விதை வெங்காய விலை உயா்ந்தாலும் விவசாயிகள் அதிக அளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றனா்.