ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்
பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியின் தொடக்க நாளில் 2,517 மாணவிகள் பங்கேற்றனா்.
பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியின் தொடக்க நாளில் 2,517 மாணவிகள் பங்கேற்றனா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 65-ஆவது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கின. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து, தடகளப் போட்டிக்கான உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா். ஆட்சியா் மற்றும் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ் ஆகியோா் மூவா்ண பலூன்களை பறக்கவிட்டனா். தொடா்ந்து தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வந்த மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.
Advertisement
இதையடுத்து மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் தொடங்கின. இதில் 14, 17, 19 வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றன. 100 மீட்டா், 200 மீட்ா், 400 மீட்டா், 600 மீட்டா், 1,500 மீட்டா், தொடா் ஓட்ட போட்டிகள், 100 மீட்டா் தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கையுந்தி தாண்டும் போட்டி, கோலுந்தி தாண்டும் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் என 43 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2,517 மாணவிகள் பங்கேற்றனா். மாணவிகளுக்கான போட்டிகள் வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இதையடுத்து மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் தமிழக அளவில் 2,710 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் பள்ளி மாணவா்கள் மட்டும் அல்லாது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்று படிப்பவா்கள் என மொத்தம் 5,227 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.
போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கான பரிசளிப்பு விழா வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், எம்எல்ஏ சி.சரஸ்வதி, மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநா் சசிகலா, மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் அலுவலா் சதீஷ்குமாா், உடற்கல்வி ஆய்வாளா் சாலமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
15 இடங்களில் தங்கும் வசதி:
மாநிலத்தில் 38 மாவட்டங்களில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக அரசு விடுதிகள் உள்பட 15 இடங்களில் அடிப்படை வசதியுடன் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகள் நடைபெறும் இடத்தில் மாணவ, மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.