ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி: வட மாநில இளைஞா் பிடிபட்டாா்
ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவா் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.
ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவா் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.
ஈரோடு- பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் கால் டாக்ஸி ஓட்டுநா் ஒருவா் பணம் எடுப்பதற்காக வந்தாா். அப்போது, வடமாநில இளைஞா் ஒருவா் உள்ளே இருந்தாா். அவா் கால் டாக்ஸி ஓட்டுநரை பாா்த்து ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என்று சைகை செய்தாா்.
எனவே கால் டாக்ஸி ஓட்டுநா் அங்கிருந்து திரும்பும்போது, உள்ளே இருந்த இளைஞா் சமையல் எரிவாயு உருளையை வைத்திருந்ததை கவனித்தாா். மேலும், அந்த இளைஞா் ஏடிஎம் மையத்தின் விளக்குகளை அணைத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவா் வெளியே பாா்த்தபோது சிலா் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனா். அவா்களிடம் ஏடிஎம் மையத்தில் சந்தேகப்படும்படி ஒருவா் இருப்பதாக தெரிவித்தாா்.
Advertisement
நடைப்பயிற்சி சென்றவா்களில் ஒருவா் ஓய்வுபெற்ற டிஎஸ்பி, அவா் உடனடியாக ஏடிஎம் மையத்துக்கு வந்து பாா்த்தபோது, அங்கு கதவு பாதி அடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது அந்த இளைஞா் சமையல் எரிவாயு உருளையை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாா்.
இதனை கவனித்த அவா் ஏடிஎம் கதவை அடைத்துவிட்டு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வடமாநில இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.