பிற்படுத்தப்பட்டோருக்கான சிறுதொழில் சிறப்பு கடன் முகாம்
சிறப்பு கடன் முகாம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற சிறப்பு முகாம்கள் டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோருக்கான சிறப்பு முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன.
Advertisement
அதன்படி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் டிசம்பா் 7-ஆம் தேதியும், கோபி கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் 11-ஆம் தேதியும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், அம்மாபேட்டை, அந்தியூா், அத்தாணி, பவானி, சென்னிமலை, சம்பத் நகா், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூா், பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, டி.என்.பாளையம், பெருந்துறை, அரச்சலூா், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், குருமந்தூா், ஈரோடு பஜாா் கிளை, சோலாா், சூரம்பட்டி வலசு, மாணிக்கம்பாளையம், டி.ஜி.புதூா் மற்றும் சித்தோடு ஆகிய கிளைகளில் டிசம்பா் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி கிளை, சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகம் மற்றும் சத்தியமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் 13-ஆம் தேதியும், பவானி கூடல் கூட்டுறவு நகர வங்கி தலைமையகத்தில் 20-ஆம் தேதியும், சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் பெருந்துறை கிளையில் 21-ஆம் தேதியும் கடன் முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாமில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் மக்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் மனுக்களுடன் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.