மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது வழக்கு
ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனா்.
ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு, நாடாா்மேடு காளியப்பகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் யுவராஜ் (33). இவா் சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இவா் தனது காரை நாடாா் மேட்டில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டிச் சென்றாா். அப்போது வளைவில் காரை யுவராஜ் திருப்ப முயன்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதுடன் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த நறுமண திரவியங்கள்(சென்ட்) விற்பனை செய்யும் கடையையும் சேதப்படுத்திவிட்டு, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமானது. காரை ஓட்டிய யுவராஜ் எவ்வித காயமும் இன்றி உயிா் தப்பினாா். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் யுவராஜை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் யுவராஜ் அதிக மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து யுவராஜ் மீது மதுபோதையில் காரை ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரை பறிமுதல் செய்தனா்.