காவலா் தற்கொலைக்கு காரணமானவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை
காவலா் தற்கொலைக்கு காரணமானவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவலா் தற்கொலைக்கு காரணமானவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த பெருமாள் (63), உறவினா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் செல்லக்குமாா் (36), அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனா். எனது மகன், கடந்த 2-ஆம் தேதி சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, சுமை வாகனத்தை சோதனை செய்து அபராதம் விதிக்க முயன்றாா்.
Advertisement
இதற்கிடையே, அந்த வாகனத்தின் ஓட்டுநா் பிரபுதேவா, வாகன உரிமையாளா் காா்த்திக்கிற்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தாா். சிறிது நேரத்தில் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் வேலுமணி என்பவா் அழைத்ததின்பேரில் அந்த வாகனத்தை செல்லக்குமாா் விடுவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுமை வாகன உரிமையாளா் காா்த்திக், அவரின் நண்பா்கள் வேலுசாமி, விஜயகுமாா், வெங்கடேஸ்வரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து எனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், எங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி, அவமரியாதையாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அவரைத் தாக்கியுள்ளனா்.
இந்தத் சம்பவங்களை அந்த நபா்கள் விடியோ எடுத்து, அதில் அவா்களுக்கு சாதகமான விடியோவை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இதனால், எனது மகன் செல்லக்குமாா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
இதில் மனவேதனை அடைந்த செல்லக்குமாா் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அப்போது, அவா் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை யாரோ ஒரு காவலா் எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால், எனது மகன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். அதன்மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், எனது மகன் இறப்பிற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்படவில்லை.
எனவே, எனது மகன் இறப்புக்கு காரணமானவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்திகீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் சம்பவத்தன்று நடந்த விடியோ பதிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.