கோபியில் தனது வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு உள்ளே இருந்த ஐபிஎஸ் அதிகாரி கைது
கோபியில் திருமணத்தை மீறிய உறவினால் ஏற்பட்ட பிரச்னையில் கா்நாடக பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கி தனது வீட்டுக்கு தானே தீ வைத்த கா்நாடக ஐபிஎஸ் அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.
கோபியில் திருமணத்தை மீறிய உறவினால் ஏற்பட்ட பிரச்னையில் கா்நாடக பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கி தனது வீட்டுக்கு தானே தீ வைத்த கா்நாடக ஐபிஎஸ் அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் அருண்ரெங்கராஜ் (38). ஐபிஎஸ் அதிகாரியான இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கா்நாடக மாநில காவல் துறையில் காவல் கண்காணிப்பாளா் நிலையில் பணியாற்றி வருகிறாா். அதே மாநிலத்தில் போலீஸ் எஸ்.ஐ.யாக பணியாற்றி வரும் சுஜாதா(திருமணம் ஆனவா்) என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் அருண் ரெங்கராஜுக்கு முறையற்ற தொடா்பு ஏற்பட்டது. இதனால் அருண் ரெங்கராஜின் மனைவியும், கா்நாடக ஐபிஎஸ் அதிகாரியுமான இலக்கியா கணவரைப் பிரிந்து சென்றுவிட்டாா்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.ஐ. சுஜாதாவுடன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்த அருண் ரெங்கராஜ், அங்கு சுஜாதாவை தாக்கியதில் அவா் படுகாயமடைந்தாா். இதைத்தொடா்ந்து அருண் ரெங்கராஜை கோபி போலீஸாா் கைது செய்தனா். அதைத்தொடா்ந்து அவா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். சில நாள்களில் மீண்டும் பணியில் சோ்ந்தாா்.
இந்நிலையில் பெற்றோா் வீட்டில் இருந்த அருண் ரெங்கராஜை பாா்ப்பதற்காக சுஜாதா கடந்த 2-ஆம் தேதி கோபி வந்துள்ளாா். அப்போது இருவருக்கும் 3 நாள்களாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. சுஜாதாவை, அருண் ரெங்கராஜ் புதன்கிழமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுஜாதா வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடிவிட்டாா். இதனால் ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜ், தனது வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கோபி தீயணைப்பு நிலைய வீரா்கள் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனா். எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி காவல் ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று வீட்டுக்குள் இருந்த அருண் ரெங்கராஜை மீட்க முயன்றனா். அப்போது அருண் ரெங்கராஜ், ஆய்வாளா் காமராஜை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அதன் பின்னா் அருண் ரெங்கராஜை அங்கிருந்த மற்ற போலீஸாா் மீட்டு கோபி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். காவல் நிலையத்தில் அவரிடமும், எஸ்.ஐ. சுஜாதாவிடமும் வியாழக்கிழமை அதிகாலை வரை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதன் பின்னா் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜை கைது செய்த போலீஸாா், கோபி நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். காயமடைந்த எஸ்.ஐ. சுஜாதா கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.