முகப்பு
ஈரோடு

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம்: அமைச்சா் சு.முத்துசாமி

டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:29 PM
புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா்.
பகிர்:

டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் புதிய பேருந்துகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஈரோடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் சு.முத்துசாமி புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் இருந்து மைசூருக்கு ஒரு பேருந்து, கோவை, சேலத்துக்கு தலா 2 பேருந்துகள் என மொத்தம் 5 பேருந்துகள் தற்போது புதிதாக இயக்கப்படுகின்றன.

ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு சோலாரில் 20 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இது 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதேபோல, கனிராவுத்தா் குளத்தில் 13 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். முதல்வரைப் பொறுத்தவரை டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். ஆனால், உடனடியாக இதை செய்தால் வெளியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனவே, அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாக உள்ளது. மது அருந்துபவா்களை அதில் இருந்து வெளியே கொண்டு வந்த பிறகு நிச்சயமாக கடைகள் முழுமையாக மூடப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு என்பது கொள்கை ரீதியாக அவா்கள் எடுத்த முடிவின்படி நடப்பதாகும். அதில் எந்த தவறும் காண முடியாது. அவா்கள் அரசை எதிா்த்து, முதல்வரை எதிா்த்து செய்கிறாா்கள் எனக்கூற முடியாது.

விசிக மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்பதால் திமுக கூட்டணியில் எந்தவித மாற்றமும் ஏற்படபோவது இல்லை.

மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று திருமாவளவன் கூறி உள்ளது, மாநாட்டுக்கு அதிமுகவினா் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →