ஈரோட்டில் கஞ்சா விற்ற இளைஞரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு சூரம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலைய பழைய குடியிருப்பு வளாகம், கொல்லம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் ரயில் நிலைய பழைய குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் கொல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (25) என்பதும் அவா் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வருவதும் முழு நேரமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மகேஷ் மீது மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 11 கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.