சத்தியமங்கலம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கும்மேலாக கால்நடைகளுக்கு சிகிச்சை பாா்த்து வந்த போலி மருத்துவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை மருத்துவம் படிக்காமல் ஒருவா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தமிழ்நாடு கால்நடை நோய்த் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த விவசாயத் தோட்டத்தில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பதும், கால்நடை மருத்துவம் படிக்காமலும், எந்தவித பயிற்சியும் பெறாமலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கால்நடை நோய்த் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.