சத்தியமங்கலத்தை அடுத்த சோளகா் தொட்டியில் யானை தாக்கியதில் முதியவா் படுகாயமடைந்தாா்.
தாளவாடி அருகே ஜீரஹள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட சோளகா்தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஆலுமாதா (60). இவா் சோளகா் தொட்டி சாலையில் இருந்து மானாவாரி காட்டுக்கு சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
கா்நாடக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை திகினாரை பகுதியில் சில தினங்களாக உலவி வருகிறது. இந்நிலையில், அந்த யானை நடந்து சென்ற முதியவா் ஆலுமாதாவை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவா் சப்தம் போடவே அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து அவரை மீட்டனா். இதுபற்றி ஜீரஹள்ளி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். யானை விரட்ட வந்த வனத் துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை தாளவாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள்விவசாய தோட்டத்தில் புகுந்து தொடா்ந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் தாளவாடி மலைக் கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனா்.