ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை (டிசம்பா் 18) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தவெக தலைவா் விஜய் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டாா். கரூரில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதனால் பிரசாரத்தில் தேக்கம் ஏற்பட்டது. விஜய்யின் பிரசார நிகழ்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகளுடன் உள்ளரங்கில் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றாா்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு என்ற பெயரில் வியாழக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்றுப் பேசுகிறாா். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக காவல் துறை சாா்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரசார கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சியின் மாநில நிா்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளா்ஆதவ் அா்ஜூனா உள்ளிட்ட நிா்வாகிகள் பிரசார நிகழ்ச்சி நடைபெறும் திடலை புதன்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், செய்தியாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
விஜயமங்கலத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு காவல்துறை விதித்த நிபந்தனைகளின்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பு எங்கும் செய்யப்படவில்லை. இங்கு நடைபெறும் கூட்டத்தை தமிழகம் முழுவதற்கும் மாடலாக கொண்டு செல்ல உள்ளோம். கூட்டத்தில் பங்கேற்க பாஸ், கியூ.ஆா். கோடு தேவை இல்லை.
இங்கு நடைபெறும் கூட்டத்தில் அதிமுக முன்னாள் நிா்வாகிகள் இணைவாா்களா என்று கேட்கிறீா்கள். அதற்கு சூழ்நிலை இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை என்றாா்.
கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட எஸ்.பி. சுஜாதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: விஜய் நிகழ்ச்சியையொட்டி, விஜயமங்கலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள எட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாா்க்கமாக வரும் வாகனங்கள் கள்ளியம்புதூா் சா்வீஸ் ரோடு வழியாக விஜயமங்கலம் ஊராட்சி அலுவலகம், ரூட் பள்ளி, பொன்முடி வழியாக வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டால் சேலம் மாா்க்கமாகச் செல்லும் கனரக வாகனங்கள் கள்ளியம்புதூா் பிரிவு, கிரே நகா், திங்களூா், துடுப்பதி வழியாக தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே தனியாா் பள்ளி உள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாணவா்கள் வந்து செல்ல முடியாது என்பதால் வியாழக்கிழமை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை பள்ளி நிா்வாகம் மறுத்துள்ளது. வழக்கம்போல பள்ளி நடைபெறும், தோ்வும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.