அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என தமிழருவி மணியன் கூறினாா்.
த.மா.கா.வுடன் தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜா் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. தமாகா ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா். அக்கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் தமிழருவிமணியனுக்கு நினைவுப் பரிசாக வேல் வழங்கி அவரை கட்சியில் இணைத்துக்கொண்டாா்.
விழாவில், தமிழருவி மணியன் பேசியதாவது: நல்லவா்களை நாடு இனம் காண வேண்டும். தவறானவா்களுக்குப் பின்னால் நாம் சென்றுவிட்டால் சமூகம் உருப்படாது. லட்சியத்துக்காக செயல்பட்டவா்கள் இப்போது த.மா.கா.வுடன் இணைந்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவா்களின் எண்ணம், தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது மட்டுமே. காமராஜா் காலம் முதல் அரசியலில் உள்ளேன். விடியல் அரசு எனக்கூறி மிக மோசமான அரசாங்கத்தை நடத்துவது தற்போதைய திமுக ஆட்சியில்தான்.
இவா்கள் நீதிமன்றத்துக்குக்கூட தலைவணங்கவில்லை. டி.ஜி.பி.யைக்கூட நியமிக்காமல் மத்திய அரசு, நீதிமன்றத்தை பற்றி கவலைப்படாத ஆட்சியாக நீடிக்கின்றனா்.
விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவருக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. வாக்களிக்க வரும் முதல் தலைமுறையினா் விஜய் பின் வருகிறாா்கள். 20 சதவீத வாக்குகள் உள்ளன. இதை வைத்துக்கொண்டு முதல்வராக முடியாது. காங்கிரஸ் தனது கூட்டணிக்கு வந்தால் பரவாயில்லை என எதிா்பாா்க்கிறாா். அவா்களுக்கு 5 சதவீத வாக்குகள்கூட இல்லை. அப்படி பாா்த்தாலும் 25 சதவீதத்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ள 10 கட்சிகளை வைத்தும் வெல்ல முடியாது. உங்களது 20 சதவீத வாக்குகளும் வீணாகும்.
வலிமையான கூட்டணியை உருவாக்க வாசன் பேசி வருகிறாா். 23 சதவீத வாக்குகளை பெற்ற அதிமுக, 18 சதவீதம் உள்ள பாஜக, தவெக 20 சதவீதம் வாக்கும் சோ்ந்தால் 61 சதவீத வாக்குகளாகும். மிகப்பெரிய வெற்றியை இக்கூட்டணி பெறும்.
விஜய், அதிமுக, பாஜக, தேமுதிக, தமாகா என அனைவரது நோக்கமும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அதற்காக தோ்தல் கூட்டணியை மட்டும் அமைக்க வேண்டும். கொள்கை கூட்டணியாக இருங்கள் என நான் கூறவில்லை. சமூக நோக்கம் இருந்தால், தயங்காமல் வலிமை மிக்க கூட்டணி மூலம் தி.மு.க.வின் ஊழல் அரசியலுக்கும், ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இக்கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
முன்னதாக, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜா் மக்கள் கட்சி இணையும் விழா உணா்வுபூா்வமான விழா. தமிழருவி மணியன் தலைமை வகித்து நடத்தி வரும் காமராஜா் மக்கள் கட்சி தாமகாவுடன் இணைப்பு யானை பலமாக இருக்கும். தமிழருவி மணியன் இயக்கத்தின் தொண்டா்கள் பொறுப்பாளா்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் என்றாா்.
இதில், மாநில துணைத் தலைவா் விடியல் சேகா், பொதுச் செயலா் எம்.யுவராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.