ஈரோடு

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை: தோ்தல் ஆணையத்துக்கு கே.ஏ.செங்கோட்டையன் கடிதம்

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி கோபியில் செய்தியாளா்களை சந்தித்தபோது, அதிமுகவிலிருந்து வெளியேறியவா்களை 10 நாள்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தாா். கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையன் கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரனுடன் சென்று மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, திமுகவைப்போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் உள்ளதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்த கடிதத்தை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் செங்கோட்டையன் அனுப்பியுள்ளாா்.

செங்கோட்டையன் மீது காவல் நிலையத்தில் புகாா்:

அதிமுக கட்சிக் கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தும் கே.ஏ.செங்கோட்டையன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஈரோடு மேற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் டி.தனக்கோட்டிராம், கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு புகாா் மனு அளித்துள்ளாா். இந்தப் புகாா் மனுவுக்கு கோபி காவல் நிலையத்தில் மனு ஏற்புச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT